மகரம்
உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கும்; ஜென்ம ராசி எதுவென்று தெரியாத, தை மாதத்தில் பிறந்தவர்களுக்கும்; போ, ஜ, ஜி, ஜே, ஜோ, க, கா, கி ... ஆகிய எழுத்துகளைத் தங்கள் பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்களுக்கும் இப்பலன்கள் பொருந்தும்.
ராசி அதிபதி: சனி. நட்சத்திர அதிபதிகள்: சூரியன், சந்திரன், செவ்வாய். யோகாதிபதிகள்: சனி, சுக்கிரன், புதன். பாதகாதிபதி: செவ்வாய். மாரகாதிபதி: சனி, சந்திரன்.
**********
மதிநுட்பமிக்க மகர ராசி
ஆயுள் காரகன், கர்மக் காரகனான சனியின் அம்சத்தில் பிறந்து, தோற்றத்தில் அமைதியானவராகவும் நினைத்ததை சாதிப்பதற்காக முடிந்தவரை நிதானத்தைக் கடைபிடிப்பவருமான, மகர ராசி நண்பர்களே!
நீங்கள் பார்வைக்கு மென்மையானவராகவும், பழகுவதற்கு இனிமையானவராகவும், கள்ளம் கபடமற்றவராகவும் காட்சியளித்தாலும் உங்கள் குறிக்கோளில் எப்போதும் தெளிவாக இருப்பீர்கள். எப்பாடு பட்டாகிலும் நாணல்போல் வளைந்து கொடுத்தாவது சாதிக்க வேண்டியதை சாதித்துக் கொள்வீர்கள்.
அன்பிற்கு அடிமையான நீங்கள் உங்கள் ஆற்றலையும் அனுபவ அறிவையும் கொண்டு மற்றவர்கள் மனதில் இடம் பிடிப்பீர்கள். உழைக்கத் தயங்காதவரான நீங்கள் எந்த நேரத்திலும் சோர்ந்துவிடவும் மாட்டீர்கள். அதே நேரத்தில் தேடிப்போய் உதவிபுரிவதில் முதல் நபராக இருப்பீர்கள்.
சனி பகவான், உங்கள் ராசியாதிபதியாகவும், குடும்பாதிபதியாகவும், தனாதிபதியாகவும் இருப்பதால் நீங்கள் மிகவும் அழுத்தமானவர் என்றே கூறவேண்டும். எதற்காக எதைச்செய்கிறீர்கள் என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும். நீங்கள் ஈடுபட்ட காரியத்தில் தோல்வி என்றாலும் அதற்காக எப்போதும் தளர்ந்து விட மாட்டீர்கள்.
உங்கள் ராசிநாதனுக்கு, உங்கள் களத்திர ஸ்தானாதிபதியானவர் பகைவர் என்பதால், திருமண வாழ்க்கையில் நீங்கள் மிகவும் நிதானத்தைக் கடைபிடித்தாக வேண்டும். அதே நேரத்தில் களத்திரக் காரகனான சுக்கிரன் உங்கள் ராசிநாதனுக்கு நட்பானவர் என்பதால் நீங்கள் நினைத்தபடியே உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள்.
மகர ராசிக்காரர்களில் ஒரு சிலருக்கு துணையால்தான் குடும்ப வாழ்க்கைச் சிறக்கும். குடும்பப் பாசம், தெய்வீகச் சிந்தனை, மதப்பற்று உங்களிடம் நிறைந்திருக்கும். வீண்பேச்சு, விதண்டாவாதம் உங்களுக்குப் பிடிக்காது என்றாலும், சில நேரங்களில் மாறிவிடுவீர்கள்.
உங்கள் ராசிநாதனுக்கு சூரியன், சந்திரன், செவ்வாய் என, பிறந்த இடத்தின் உறவுக்குக் காரணமான கிரகங்கள் பகைவர்கள் என்பதால், நீங்கள் பிறந்த குடும்பத்திற்கும் உங்களுக்கும் ஒட்டும் உறவும் இல்லாத நிலையே உண்டாகும். தந்தையின் துணை இல்லாமலேயே தனியாக முன்னேறி வெற்றி
காண்பவரான உங்களுக்கு சகோதரர்களும் பகைவர்களாக மாற்றப்படுவார்கள். உங்கள்மீது கோபம் கொண்டவராகவே இருப்பார்கள். பிற்கால வாழ்க்கை என்பது உங்களுக்கு மிகவும் கடினமானதாகவே இருக்கும்.
பொதுவாகவே உங்களை மதித்து, உங்களை நாடி வருபவர்களுக்கு உதவக்கூடிய மனம் படைத்த நீங்கள், சுயமாக சம்பாதித்து வாழ விரும்புவீர்கள். உங்களை அலட்சியப்படுத்தி அடக்கியாள நினைப்பவர்களை கொஞ்சமும் விரும்ப மாட்டீர்கள்.
மகர ராசியில் பிறந்த நீங்கள் தொழில் கூடங்கள் அமைத்து பலருக்கு வேலை வாய்ப்பளிப்பீர்கள். அல்லது, பலர் பணிபுரியும் இடத்தில் மேலாளராக இருப்பீர்கள். கட்டிடத்துறை, பொறியியல்துறை, இயந்திரத்துறை, எலெக்ட்ரானிக்ஸ், பதிப்பகத்துறை என்று உங்களில் பலருக்கும் வேலை வாய்ப்பு அமையும். ஏற்றுக்கொண்ட தொழில் எதுவாக இருந்தாலும் அதில் முதன்மையானவராய் வருவீர்கள்.
வாழ்வின் முற்பகுதி உழைப்பு உழைப்பு என்று சென்றாலும், பிற்பகுதி உங்களுக்கு யோகமாகவே இருக்கும். பிள்ளைகளால் உங்களுக்கு யோகம், உதவி என்பது சிரமம்தான். கடைசி காலத்தில்கூட உங்களுக்கு பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள் என்று கூற முடியாது.
இல்லற வாழ்வில் தாமதமாக மணம் செய்து கொள்ளும் சூழ்நிலை ஒருசிலருக்கு உருவாகலாம். தாமதம்தான் உங்கள் வாழ்வில் நற்பலன்களை வழங்கும். இள வயது திருமணத்தால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இருப்பினும், கணப்பொருத்தம், மகேந்திர பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம் ஆகியவை பொருத்தமானால் வாழ்க்கைத் துணையால் உங்களுக்கு வளர்ச்சிக்கூடும். உங்கள் ராசியில் குரு பகவான் நீச்சமடைகிறார். செவ்வாய் உச்சம் அடைகிறார் என்பதால் தைரியமும் தன்னம்பிக்கையும் உங்களுக்கு இருந்தாலும் ஆன்மீக வழிகாட்டிகளாலும், ஆன்மீக ஈடுபாட்டினாலும் தான் உங்கள் வாழ்வில் மாற்றங்கள் நிகழ்கின்றன.
ஒரே சமயத்தில் இருவேறு நன்மைகளை அடைய முயல்வீர்கள். ஒருவகையில் செலவு செய்தால் பலவகையில் வருமானம். அல்லது, ஆதாயம் வரவேண்டும் என்று கருதியே செலவு செய்வீர்கள். எந்தநேரத்தில் எந்தக் காரியத்தை எந்த வகையில் எப்படிச் செய்யவேண்டும் என்பதைப் பற்றி ஆலோசித்தும், ஆழ்ந்த யோசனையோடும் செய்வீர்கள்.
உங்கள் போக்கும் நடவடிக்கையும் விசித்திரமாகவே இருக்கும். உங்களில் பலர் பக்தர்களிடம் பரம பக்த சிகாமணிகள் போலவும், நாத்திகரிடத்தில் மூடநம்பிக்கைகளை ஒழித்து சீர்திருத்தம் செய்ய வந்தவர்போலும் நடித்து காரியத்தை நிறைவேற்றிக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். சுய முயற்சியும் சொந்த அனுபவ பயிற்சியும் கொண்ட நீங்கள் வெற்றியை நோக்கி உறுதியுடன் பயணிப்பீர்கள்.
சில சமயங்களில் உங்கள் புத்தி பேதலிக்கும். அதனால், பிரச்சினைகளுக்கும் ஆளாவீர்கள். நிறைய சவால்களை சந்திக்க வேண்டியவர்களாகவும் இருப்பீர்கள். உயர்வை அடைய வேண்டிய நேரத்தில் மனநிலையில் மாற்றமும் சோர்வும் உண்டாகி உங்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடும். உங்களில் சிலர் நன்மையானவற்றை இழந்துவிட்டு 'அய்யோ தவறு செய்து விட்டோமே' என்று வருந்துவீர்கள்.
உங்கள் ராசியதிபதி சனி பகவான் என்பதால் எவ்வளவு தைரியமுடையவர்களாக இருந்தாலும் உங்களில் பலருக்கு பயமும் கட்டுப்பாடுகளும் இயற்கையாகவே ஏற்படும். உங்கள் வாழ்வில் ஏற்படும் சந்தர்ப்ப சூழல்கள். நிகழ்ச்சிகள் முதலியவற்றில் சில உங்களை பயமுறுத்தும். உங்கள் அறிவுக்கு புலனாகாத ஏதோ ஒன்றுக்கு பயப்படுவீர்கள். உடும்புப் பிடிக்குள் சிக்கிக் கொண்டதைப்போல் அவதிப்படுவீர்கள்.
நீங்கள் ஈடுபடும் காரியங்களில் தோல்வி வரும் என்று தெரிந்தால் சோர்ந்து போவீர்கள். வாழ்க்கையில் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றால், எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுத்து விடக்கூடாது. உங்கள் ராசிநாதன் தர்ம நியாயத்தின்படி நடந்து கொள்பவர். தவறு செய்பவர்களை தயவு தாட்சண்யமின்றி தண்டிப்பவர் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. நீங்கள் தவறு செய்ய ஆரம்பித்தால் அதனால் பயங்கரமான விளைவுகளையும் சங்கடங்களையும் சந்திக்க வேண்டியதாக இருக்கும். உங்களுக்கு இயல்பாகவே இருக்கும் கர்வமும், உங்கள் மனப்போக்கின்படி நடந்து கொள்ளும் குணமும் உங்களுக்கு எதிர்ப்பையும் இடைஞ்சல்களையும் உண்டாக்கும் அதில் சிக்கிக்கொண்டு அவதிப்பட வேண்டியதாகிவிடும்.
உங்களுக்கு உண்டாகும் தோல்வி என்பது உங்கள் அகந்தையின் காரணத்தினாலேயே உண்டாகும். பல நேரங்களில் உங்கள் உள்ளுணர்வே உங்களுக்குப் பகையாகிவிடும்.
வாழ்க்கையில் நீங்கள் நன்மைகளைக் காணவேண்டும் என்றால் நல்லவராகவும், ஒழுக்கமானவராகவும், நீதி நெறிகளின்படி வாழக்கூடியவர்களாகவும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். இவையெல்லாம் மகர ராசியில் பிறந்த அனைவருக்குமான பொதுப்பலன்களாகும்.
நீங்கள் மகர ராசியில் பிறந்திருந்தாலும் உங்கள் ஒவ்வொருவருக்கும் நட்சத்திரங்கள் வேறுபட்டிருக்கும். உங்கள் ராசிநாதனான சனி பகவானின் சஞ்சார நிலை மாறுபட்டிருக்கும். ஜாதகத்தில் கிரகங்கள் வேறுபட்டிருக்கும். லக்னங்களில் மாற்றம் இருக்கும். தசா புத்திகளில் வித்தியாசங்கள் இருக்கும். ஒருவருக்கு அமைந்திருப்பதுபோல் மற்றவர்களுக்கு கிரகங்கள் அமைந்திருக்காது என்பதால் ஜனன ஜாதகத்தின் அடிப்படையில் பலன்கள் மாறுபடும்.
இந்த நிலையில்தான் கோட்சார ரீதியாக கிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து நமக்கு உண்டாகப்போகும் பலன்களை அறிந்து கொள்கிறோம். ஜாதக ரீதியாக பாதகமான நிலையில் உள்ளவர்களுக்கும் கோட்சார பலன்கள் வழியே நன்மைகள் உண்டாகவும் வாய்ப்புள்ளது. அந்த ரீதியில் சுபகிரகமான குரு பகவானின் பெயர்ச்சியை நாம் அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளோம்.
அதிர்ஷ்டங்களை அள்ளித்தரும் ஐந்தாமிட குரு
கடந்த ஒரு வருடமாக உங்கள் ராசிக்கு சுகஸ்தானம், மாதுர் ஸ்தானமான நான்காம் வீட்டில் சஞ்சரித்து வந்த குரு பகவான் 1.5.2024 அன்று ஐந்தாம் வீடான பூர்வ, புண்ணிய, புத்திர ஸ்தானமான ரிஷப ராசியில் சஞ்சரித்து பலன்களை வழங்கிட உள்ளார்.
நான்காமிட குருவின் காலத்தில் எல்லாவற்றிலும் பிரச்சினை, சங்கடம், நினைத்தபடி எதையும் செய்து முடிக்க முடியாமல் மன உளைச்சல். தொழிலில் பாதிப்பு, வேலையில் நெருக்கடி, அலைச்சல், குடும்பத்தில் குழப்பம், தாயாரின் உடலில் பாதிப்பு, கண்டம் என்று பல வகையிலும் சங்கடங்களையும் அடைந்திருப்பீர்கள்.
சரி; நான்கிலிருந்து எங்கள் வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளை உண்டாக்கி வந்த குரு பகவான் ஐந்தாமிடத்திற்கு வரும் காலத்திலாவது நன்மையை ஏற்படுத்துவாரா? தடைபட்டிருந்த காரியங்கள் எல்லாம் நல்ல விதத்தில் நடக்குமா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
பொதுவாக குரு பகவான், தான் அமரும் இடத்திற்கு நற்பலன்களை வழங்க மாட்டார். அவர் பார்க்கும் இடங்களுக்கு மட்டுமே அமோகமான பலன்களை வழங்குவார். வளத்தையும் நலத்தையும் உண்டாக்குவார் என்றாலும், 2, 5, 7, 9, 11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் அவர் அமர்ந்த இடத்திற்கும் நற்பலன்களை வழங்குவார். பார்க்கும் இடங்களுக்கும் யோகத்தை உண்டாக்குவார்.
ஐந்தாமிட குரு என்னதான் செய்வார்? எத்தகைய பலன்களை வழங்குவார்? ஜாதகத்தில் ஐந்தாம் இடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம். புத்திர ஸ்தானம் என்பதாகும். இந்த இடத்தை வைத்துதான் முன் ஜென்மத்தில் நாம் செய்த பாவ புண்ணியங்களால் விளையக்கூடிய நன்மைகள், பலாபலன்கள், புத்திரர்கள் பிறத்தல், அவர்களின் தன்மை, புத்திக் கூர்மை, சிந்தனையாற்றல், தாய்மாமன், சக்தி, வித்தை, இறைவழிபாடு என்பதையெல்லாம் தெரிந்து கொள்கிறோம்.
ஐந்தாம் இடத்திற்கு வரும் குரு பகவான், இத்தனை நாளும் ஏதோ ஒரு சோகத்தில் இருந்த உங்கள் மனநிலையை மாற்றி தெளிவை உண்டாக்குவர். தேகத்தில் சுறுசுறுப்பை வழங்குவார். தடைபட்டிருந்த காரியங்கள் ஒவ்வொன்றையும் சாதகமாக்கி நீங்கள் வெற்றி அடையக்கூடிய நிலைய உருவாக்குவார். உத்தியோகத்தில் இருந்துவந்த சிரமங்களை அகற்றி அதில் முன்னேற்றத்தையும், கௌரவத்தையும், வருமான உயர்வையும் உண்டாக்குவார். மேல் அதிகாரிகளின் உதவி இக்காலத்தில் உங்களுக்கு பரிபூரணமாக கிட்டும். சுய தொழில் புரிவோருக்கு இக்காலம் மிகச்சிறப்பாக இருக்கும். லாபம் பல வழிகளிலும் வரும். தொழிலில் புதிய முதலீடு செய்வீர்கள். கேட்ட இடத்தில் கேட்ட உதவி கிடைத்து அதனால் முன்னேற்றம் காண்பீர்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்கு இக்காலத்தில் திருமணம் கூடிவரும். வசதியும் அந்தஸ்தும் அதிகரிக்கும். உங்கள் ரசனைக்கேற்ற விதத்தில் இருப்பிடம் மாறும். இருப்பிடத்தில் நவீன சாதனங்களின் சேர்க்கை உண்டாகும். உங்களுக்கு வரும் வாழ்க்கைத் துணையால் நன்மைகள் உண்டாகும். புனித ஸ்தலங்களுக்கு சென்றுவரும் பாக்யம் உண்டாகும். சிலர் இருக்கும் வீட்டைப் புதுப்பிப்பீர்கள். சிலர் புதிய வீடு வாங்குவீர்கள். அதற்கான உதவிகளும் இக்காலத்தில் கிடைக்கும்.
ஐந்தில் அமர்ந்து அந்த இடத்திற்குரிய பலன்களை நற்பலன்களாக வழங்கும் குரு பகவான் அவர் பார்க்கும் இடங்களையும் செழிப்படைய வைத்து உங்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல இருக்கிறார். குரு பகவான் ஐந்தாம் வீட்டிலிருந்து, உங்கள் ராசியையும், 9 மற்றும் 11 ம் வீடுகளையும் பார்வையிட இருக்கிறார். ஒன்பதாம் பார்வை உங்கள் ராசிக்கு உண்டாவதால், இனி உங்கள் வாழ்க்கைநிலை உயரப்போகிறது. நீங்கள் பிறந்த பலனை இக்காலத்தில் அடையப்போகிறீர்கள். உங்கள் புகழையும் பெருமையையும் உலகம் அறியப்போகிறது. எதையோ இழந்ததுபோல் வருத்தப்பட்டுக் கொண்டிருந்த உங்கள் வாழ்வில் புது வசந்தம் வீசப்போகிறது. தோற்றத்தில் மிடுக்கு கூடும். செயலில் வேகம் அதிகரிக்கும். ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழக் கூடிய நிலை உண்டாகும். உங்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த நோய்கள் விலகும். உடலின் ஐம்பொறிகளும் மகிழ்ச்சி அடையும் நிலை உண்டாகும். மாணவர்களுக்கு மேற்கல்வி முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் நிலவிய சங்கடங்கள் விலகி லாபம் கூடும். உத்தியோகஸ்தர்கள் பாராட்டப்படுவார்கள். வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு புதிய வேலை அமையும்.
அடுத்து, குரு பகவானின் ஏழாம் பார்வை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11 ம் இடத்தில் பதிவதால், பொன்னும் பொருளும் உங்கள் வீட்டில் நிறையப் போகிறது. எதிர்பார்ப்பு இல்லாமல் செய்த செயல்களிலும் லாபம் காணப் போகிறீர்கள். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நடக்கப்போகிறது. அரசாங்க உதவியும் ஆதரவும் அதிகரிக்கப் போகிறது. நண்பர்களும் உறவினர்களும் ஆதரவாக இருந்து உங்களுக்கு பக்க பலமாக மாறும் நிலை உண்டாகப் போகிறது. புதிய சொத்துகள் வாங்கும் நிலை ஏற்படப் போகிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், எதிர்பார்த்த இடமாற்றமும் உண்டாகும். துணையை இழந்தவர்களுக்கு புதிய துணை அமையும். வாழ்க்கைத் துணையைத் தவிர வேறொருவரால் அனுகூலமும் சந்தோஷமும் காணும் நிலை சிலருக்குண்டாகும். கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதிகள் ஒன்றுசேரும் நிலையுண்டாகும். உங்கள் நீண்டநாள் எண்ணங்கள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
குரு பகவானின் ஐந்தாம் பார்வை உங்கள் ராசிக்கு 9 ம் இடமான பித்ரு ஸ்தானம், பாக்ய ஸ்தானம், தர்ம ஸ்தானம் என்றெல்லாம் அழைக்கப்படும் இடத்தில் பதிவதால் தந்தையின் நிலையில் மாறுதலை ஏற்படுத்தப் போகிறார். ஆன்மீகத்தில் அதிகபட்ச ஈடுபாட்டை உண்டாக்கப் போகிறார். பழைய பிரச்சினைகளில் எல்லாம் ஒரு முடிவினை ஏற்படுத்தப்போகிறார். வழக்குகளில் வெற்றியை உண்டாக்கப் போகிறார். திருமணத்தில் தடை ஏற்பட்டு வந்தவர்களுக்கு திருமணத்தை நடத்திவைக்கப் போகிறார். வாழ்க்கைத் துணையின் வழியே அந்தஸ்தையும் செல்வாக்கையும் உயர்த்தப் போகிறார். பொன் பொருள் சேர்க்கையை உண்டாக்கப் போகிறார். சொந்தமாக வீடு, நிலம் வாங்கும் நிலையை வழங்கப்போகிறார். கல்வி கற்போர்க்கு சிறப்பினை உண்டாக்கப் போகிறார். கடல் கடந்து பயணம் செய்யும் வாய்ப்பை உங்களுக்கு வழங்கப் போகிறார். பொதுவாக இக்காலத்தில் நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியென்ற நிலை உண்டாகும்.
இவை யாவும் குருபகவானின் ஸ்தான பலத்தாலும், பார்வைகளினாலும் நீங்கள் காணப்போகும் பலன்களாகும். உங்கள் ராசியினருக்கு நான்கு வாசல்களின் வழியாகவும் இக்காலத்தில் குருபகவான் நன்மைகளை வழங்கிட உள்ளார் என்பதால், இக்காலம் உங்களுக்கு நற்காலமாகும்.
பலன்களை மாற்றும் அஸ்தமன காலம்
குரு பகவான் நான்காம் இடத்தில் சஞ்சரித்து உங்களுக்கு எதிர்மறையான பலன்களை வழங்கிக் கொண்டிருந்த நிலையில், 1.5.2024 முதல் பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்திற்கு சென்று சாதகமான பலன்களை வழங்கிட உள்ளார் என்றாலும், 3.5. 2024 முதல் 2.6. 2024 வரை அவர் அஸ்தங்கம் அடைகிறார் என்பதால், ஐந்தாம் இட குருவின் பலன்கள் இக்காலத்தில் உங்களுக்குக் கிடைக்காமல் போகும்.கடந்த கால நிலையே இப்போதும் தொடரும். உங்கள் சுய ஜாதகத்தில் திசா புத்தி சாதகமாக இருந்தால் அந்த நிலைக்கேற்ப யோகம் உண்டாகும். மற்ற கிரகங்களின் சஞ்சாரத்திற்கு ஏற்ப சாதக பாதக நிலைகள் உண்டாகும். இக்காலத்தில் குரு பகவான் அஸ்தங்கம் அடைவதால் செயல்களில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் அவசரப்பட்டு எந்த ஒரு முயற்சியிலும் இக்காலத்தில் ஈடுபட வேண்டாம்.
வக்ர குரு வளம்தருவாரா?
குரு பகவானின் சஞ்சார நிலையில் அஸ்தமனமும், வக்ர நிலையும் ஏற்படுவதால் அக்காலங்களில் அவர் வழங்கும் பலன்களில் மாற்றம் உண்டாகும். 15.10.2024 முதல் 11.2.2025 வரை அவர் வக்ரம் அடைவதால் பஞ்சமஸ்தானத்தில் இருந்து அவர் வழங்கி வரும் சாதகமான பலன்கள் இக்காலத்தில் மாறுபடும். பொதுவாக குரு பகவான் வக்ரமடையும் போது முன்பிருந்த ராசியின் பலன்களை வழங்கிடக் கூடியவர் என்பதால் இக்காலத்தில் கடந்த காலத்தில் உங்களுக்குண்டான பலன்கள் மீண்டும் தொடரும். உங்கள் உடல்நிலை சீராகும். செல்வாக்கு உயரும். தொழிலில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். புதிய இடம் வாங்குவது வீடு கட்டுவது பிள்ளைகளின் மேற்கல்விக்காக செலவு செய்வது என்று பல வகையிலும் செலவுகள் தோன்றும். உறவினர்களும் உதவி கேட்டு உங்களை நோக்கி வருவார்கள். ஆலய தரிசனம், விசேஷங்கள் என்று உங்கள் பணம் பல வகையிலும் கரைய ஆரம்பிக்கும். இருந்தாலும் மனதில் நிம்மதியான நிலை ஏற்படும்.
பாத சனியால் பயம்போகும்
குரு பகவான் ஐந்தாம் இடத்தில் சஞ்சரிக்கும் காலத்தில், உங்கள் ராசிநாதனான சனி பகவான் ராசிக்கு இரண்டாம் இடமான தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் பாத சனியாக சஞ்சரிக்கிறார் என்பதால், ஜென்ம சனியால் ஏற்பட்ட சங்கடங்கள் இக்காலத்தில் இல்லாமல் போகும் என்றாலும், குடும்பத்தில் ஏதேனும் ஒரு வகையில் சங்கடம் தலையெடுக்கும். ஒரு விஷயம் முடிவிற்கு வந்த நிலையில் வேறு விஷயங்கள் தோன்றி உங்களைத் தடுமாற வைக்கும். நிம்மதியற்ற நிலை ஏற்படும். பணவரவில் தடைகளும் தாமதமும் உண்டாகும். பேச்சில் நிலையான தன்மை இல்லாமல் போகும். வாக்கு தவறவும் நேரும். எதிலும் நாட்டமற்ற நிலை உண்டாகும். உற்றார் உறவினர்களின் வெறுப்புக்கும் பகைக்கும் ஆளாக நேரும். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சம் மனதில் குடிகொள்ளும். உடல் நிலையும் பாதிக்கப்பட்டு சுகமற்ற நிலை உருவாகக்கூடும். இக்காலத்தில் ஒரு சிலர் கடுமையாக பாதிக்கப்படலாம். எட்டாம் இடம் பெண்களின் மாங்கல்ய ஸ்தானம் என்பதால், மகர ராசி பெண்கள் கணவரின் உடல்நிலையில் சர்வ ஜாக்கிரதையாக கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் தங்களுடைய மாங்கல்ய பலம் நிலைக்க இறை வழிபாட்டை, குறிப்பாக காலபைரவரை தொடர்ந்து வணங்கி வருவது நன்மையாகும்.
ராகு - கேது சஞ்சாரப் பலன்கள்
ஐந்தாம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் நிலையில், முயற்சி ஸ்தானமான மூன்றாம் இடத்தில் ராகு சஞ்சரித்து வருகிறார். இக்காலத்தில் எல்லாவற்றிலும் உங்கள் செல்வாக்கு உயரும். தைரியமாக சில காரியங்கள் செய்து முடிப்பீர்கள். உங்களைவிட மேலானவர்களால் நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். உயர் மட்டத்தில் இருப்பவர்களின் நட்பிற்கு உரியவர்களாவீர்கள். சகல விதத்திலும் உங்களுக்கு ராகு பகவான் நன்மைகளையே வழங்குவார். இதுவரை உங்களை நெருங்காமல், விலகி இருந்த உறவுகளும் இனி உங்களைத் தேடிவருவார்கள். அந்த அளவிற்கு உங்கள் அந்தஸ்து உயரும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்களுக்கும் நல்லகாலம் இருப்பதை இக்காலத்தில் நீங்கள் உணருவீர்கள். உங்கள் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் அதனால் துணிச்சலாக சில காரியங்களில் இறங்கி வெற்றி காண்பீர்கள். இந்த நேரத்தில், கேது பகவான் பாக்ய ஸ்தானமான ஒன்பதாமிடத்தில் சஞ்சரிப்பதால் தெய்வ அருள் இக்காலத்தில் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். தீர்த்த யாத்திரை, வழிபாடு போன்றவற்றை நிறைவேற்றுவீர்கள். இதுவரை உங்களுக்கிருந்த சங்கடங்கள் விலகும். தோல்வி நஷ்டம் என்ற நிலை மாறி, வெற்றி லாபம் என்ற நிலை உருவாகும். மனதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். குடும்பத்திலும் நன்மைகள் நடக்க ஆரம்பிக்கும். தந்தையின் உடல் நிலையில் கொஞ்சம் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.
சூரியனால் உண்டாகும் ராஜயோகம்
ஒவ்வொரு கிரகமும், தான் சஞ்சரிக்கும் நிலைக்கேற்ப, சஞ்சரிக்கும் இடத்திற்கேற்ப பலன்களை வழங்குவதுபோல், சூரிய பகவானும் அவரவர் ராசிக்கு 3, 6, 10, 11 ம் இடங்களில் சஞ்சரிக்கும்போது ஜாதகருக்கு ராஜ யோகத்தை உண்டாக்குவார். மற்ற கிரகங்களால் ஏற்படும் சங்கடங்களை எல்லாம் மாற்றம் செய்வார். எதிர்மறையான பலன்களைக் கட்டுப்படுத்துவார். அக்காலங்களில் ஜாதகரின் செயல்களை எல்லாம் வெற்றியாக்குவார். அந்த வகையில் மகர ராசியினரான உங்களுக்கு ஆனி, ஐப்பசி, கார்த்திகை, பங்குனி ஆகிய நான்கு மாதங்களும் யோகமான மாதங்களாக இருக்கப் போகிறது. நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் இக்காலத்தில் லாபமாகும். தடைபட்டிருந்த காரியங்கள் நடந்தேறும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் விலகி முன்னேற்றம் உண்டாகும். இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும். எதிரிகளின் தொல்லை விலகும். போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். தொழிலுக்காக எதிர்பார்த்த அனுமதிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம், தொழிலில் எதிர்பார்த்த லாபம் வரும். மனதில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும்.
பொதுப்பலன்
ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் குருவின் காலம் உங்களுக்கு வசந்த காலமாகும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த அதிர்ஷ்ட நிலை உங்களுக்கு உண்டாகும். ஐந்தாம் இடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பதால் குரு பகவான் இங்கு சந்திக்கின்றபோது உங்கள் எண்ணமெல்லாம் நிறைவேறும் அதிர்ஷ்ட நிலை உண்டாகும் இதுவரையில் இருந்த சங்கடங்கள் எல்லாம் விலக ஆரம்பிக்கும். நீண்ட காலமாக இருந்த பிரச்சினைகள் இனி இல்லாமல் போகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் இக்காலத்தில் கிடைக்கும். ஒரு சிலர் வாழ்க்கையில் உச்சத்தை அடைகின்ற நிலையும் உண்டாகும். உயர் பதவியிலும் அமர முடியும். பொருளாதார நிலையில் இருந்த சங்கடங்கள் முழுமையாக விலகி வருவாய் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். குழந்தை பாக்யத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு எண்ணம் பூர்த்தியாகும். புதிய முயற்சிகள் வெற்றியாகும் பண வரவு பல வகையிலும் இருக்கும். வெளிநாட்டு தொடர்புகள் ஆதாயத்தை ஏற்படுத்தும். கலைஞர்களுக்கு, தொழில் அதிபர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு, விவசாயிகளுக்கென்று, அனைவருக்குமே இக்காலம் மிகப்பெரிய யோக காலமாக இருக்கும். மாணவர்களின் மேற்கல்வி முயற்சி வெற்றியாகும். பெண்களின் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் செழிக்கும். வாழ்க்கை வளமாகும்.
பரிகாரம்
உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் ஒருமுறை திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானையும், குரு பகவானையும் அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதுடன், திருநள்ளாருக்கு சென்று சனி பகவானிடம் இருந்த நள மகாராஜாவை பாதுகாத்த சிவ பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டுவர வாழ்க்கை வளமாகும்.
திருக்கோவிலூர் பரணிதரன்
துல்லியமான கணிப்புகளுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு எண்ணில் எங்கள் புகழ்பெற்ற ஜோதிடரைத் தொடர்பு கொள்ளவும்.
For Appointment
9361761408 / 9940105752
Walkin to our Office:
Address: 44, 1st Floor, Chakrapani St, above Kotak Mahindra Bank ATM,
near five lights, Rangarajapuram, West Mambalam, Chennai, Tamil Nadu 600033
Google Map: Sun Astro TV office

Comments
Post a Comment