துலாம்
சித்திரை 3, 4 ம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கும்; ஜென்ம ராசி எதுவென்று தெரியாத ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களுக்கும்; ர, ரா, ரி, ரு, ரே, ரோ, த, தா, தி, து, தே ஆகிய எழுத்துகளைத் தங்கள் பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்களுக்கும் இப்பலன்கள் பொருந்தும்.
ராசியின் அதிபதி: சுக்கிரன். நட்சத்திர அதிபதிகள்: செவ்வாய், ராகு, குரு. யோகாதிபதிகள்: சனி, புதன், சுக்கிரன். பாதகாதிபதி: சூரியன். மாரகாதிபதி செவ்வாய்.
**********
துணிவுமிக்க துலாம் ராசியினர்
அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரனின் அம்சத்தில் பிறந்து வெற்றியை எட்டுகின்ற வரையில் துவளாத மனதோடு துடிப்போடு செயலாற்றக்கூடிய துலாம் ராசி நண்பர்களே!
பழக்கத்திற்கு இனியவராய், அடுத்தவரை வசீகரிப்பவராய், மனதில் இருப்பதை வெளியில் காட்டிக்கொள்ளாதவராய் வாழ்ந்துவருபவர் நீங்கள். குடும்பத்திலும், தொழில்புரியும் இடத்திலும் தனக்கென்று ஒரு கௌரவம் வேண்டும் என்று நினைப்பீர்கள். நன்றி மறக்காத நீங்கள், ஒருமுறை ஒருவர் செய்த உதவியை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க மாட்டீர்கள்.
எல்லோரையும் எளிதில் கவரும் ஆற்றல் உங்களுக்குண்டு. உங்கள் அணுகுமுறை மற்றவர்கள் மனதைப் புண்படுத்தாத விதத்தில் அமையும். நீதி நேர்மைக்கு என்று நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பதால் உங்களுக்கென்று ஒரு தனிக்கூட்டம் இருக்கும். பஞ்சாயத்துகளில் உங்கள் பேச்சைக்கேட்டு நடக்க பலரும் காத்திருப்பார்கள்.
பார்ப்பதற்கு பசு போன்று காணப்பட்டாலும் உங்களுக்குள் நீங்கள் ஆவேசக்காரர்; அவசரக்காரர்; நிதானிக்காமல் பல காரியங்களில் ஈடுபடக்கூடியவர். ஒரு கட்டத்திற்குப்பின் நீங்கள் அதைப்பற்றி யோசிக்க ஆரம்பிப்பீர்கள். முன்கோபமே உங்கள் முதல் எதிரியாகும். அதனை உணர்ந்தபிறகு ஆன்மீகத்தில் ஈடுபட்டு தெளிவீர்கள். வாழ்க்கையைப் புரிந்துகொண்டு வாழத் தொடங்குவீர்கள்.
உங்கள் ராசிநாதன் களத்திரக்காரகன் என்பதால் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும்போது பொருத்தம் பார்த்துத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் நோக்கம் அறிந்து அவர்கள் செயல்பட மாட்டார்கள். அதனால் மணவாழ்க்கையில் சங்கடங்கள் உண்டாகும்.
அள்ளிக் கொடுப்பவரான சுக்கிரனின் வம்சம் நீங்கள் என்பதால் எப்போதும் அதிர்ஷ்டக்காரராகவே இருப்பீர்கள். செல்வச்செழிப்புள்ளவராக நீங்கள் மாற வேண்டும் என்றால் சுக்கிரனுக்குரிய நட்சத்திரத்தில் அவருக்குரிய ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வரவேண்டும்.
அல்சர், ஒவ்வாமை, வயிற்று உபாதை, சிறுநீரக கோளாறு, தலைவலி, தோல் சார்ந்த நோய்கள் என்று உங்களில் ஒரு சிலரை வாட்டும். நோய் வரும்போதே அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்வதுடன் எச்சரிக்கையாகவும் இருந்திட வேண்டும்.
மேஷ ராசியினர் மூலம் உலக விவரங்களையும் வித்தைகளையும் கற்றுத் தேர்ச்சிபெறும் உங்களுக்கு, கும்ப ராசியினர் நல்லுதவி புரிபவர்களாக இருப்பார்கள். மகர ராசியினரிடம் எப்போதும் கவனத்துடன் செயல்பட வேண்டிய நிலையுடைய உங்களுக்கு, வேலைவாய்ப்பு சார்ந்த உதவிக்கு கடக ராசியினரின் ஒத்துழைப்பு நற்பலனைத்தரும்.
துலாம் ராசியில் பிறந்த உங்களுக்கு அரசியல் சிறப்பாக இருக்கும். அதேபோல் அரசு தொடர்புடைய தொழிலில் ஈடுபடுவீர்கள். காவல், ராணுவம், பதிப்புத்தொழில், பத்திரிகைத்துறை, ஹோட்டல் போன்ற தொழில்களில் முத்திரைப் பதிப்பீர்கள். உங்களில் பெரும்பாலோருக்கு புத்திர பாக்கியம் என்பது வரம் போன்றது என்றே ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
வாக்கு சாதுரியமும், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் ஆற்றலும் பெற்ற உங்களுக்கு 40 வயதுவரை வாழ்க்கை மிகவும் போராட்டமாகத்தான் இருக்கும். கடன் வாங்குவதும், அதற்கு வட்டி கட்டுவதும் என்றே உங்கள் வருமானம் சிதறும். கூட்டு வியாபாரத்தின்போது கூட்டாளிகளிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
துலாம் ராசியில் பிறந்தவராகவே இருந்தாலும் ராஜ கிரகமான சூரியன் உங்களுக்கு நட்பாகவோ, உச்சமாகவோ, ஆட்சியாகவோ அமைந்திருக்கும்போது உங்களுக்கு அரசாங்க வேலைக்கிடைக்கும். சூரியன் பகை பெற்றிருந்தால் அரசு வேலையைப்பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது. இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் ஒவ்வொருவரும் அவர்களுக்கேற்ற நிலையை உணர்ந்துகொண்டு அதற்கேற்ப வழியை உருவாக்கிக் கொண்டு வாழ முடியும்.
உறவினர்களிடம் எப்போதும் பற்றுடையவர்களாகவே நீங்கள் இருப்பீர்கள். வாழ்க்கைக்குத் தேவையான பொருட்கள், வசதிகள் அனைத்தையும் சேகரித்துக்கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். நயமாகப் பேசுவதில் சாமர்த்தியசாலியான உங்களது பேச்சினால் எதிர்பாலினர் உங்களிடம் பேசிப்பழகவும் அன்பைப்பெறவும் முயற்சிப்பார்கள். உங்கள் சிறந்த குணாதிசயங்கள், வாக்கு வன்மை, வசீகரம் போன்றவற்றால் மற்றவர்களை எளிதில் உங்கள் வசமாக்கிக் கொள்வீர்கள்.
நிதானமாக செயல்படுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் நீங்கள், அவசரப்பட்டு எந்தவொரு காரியத்திலும் இறங்க மாட்டீர்கள். உங்களை உதாசீனம் செய்வோர்பற்றி எப்போதும் கவலைப்பட மாட்டீர்கள். மற்றவர்கள் தவறாக நினைத்து விடுவார்களோ என்றும் கவலைப்பட மாட்டீர்கள். உங்களுக்குத் தெரிந்தவற்றைப்பற்றி ஆழ்ந்து ஆராய்ந்து உண்மையை உணர்ந்து கொள்வீர்கள். உங்களுடைய கருத்தை எந்த இடத்திலும் எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் மனம் துணிந்து எடுத்துச் சொல்வீர்கள்.
நீதி, நியாயம், நேர்மை இவற்றிலிருந்து துளியளவும் தவறக்கூடாது என்ற எண்ணம் கொண்டவராக நீங்கள் இருப்பீர்கள். உழைப்பால் வருகின்ற ஊதியத்தையே உயர்ந்த வருவாயாக எண்ணுவீர்கள். பொதுநலத்தில் சிறிதும் சுயநலமின்றி உழைக்கும் உங்களை ஊரே போற்றும். கல்வியில் மிகப்பெரிய இலக்கை எட்ட முடியாமல் போனாலும், இயற்கையாகவே அறிவுத்திறமை மிக்கவர்களாக நீங்கள் இருப்பீர்கள். அனுபவத்தால் எதையும் கற்றுக்கொள்வீர்கள். எந்தப்பொறுப்பு வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள தயங்க மாட்டீர்கள். ஏற்ற பொறுப்பினை உங்கள் திறமையால் சரியாக நடத்தியும் காட்டுவீர்கள்.
சிறுவயதில் சிரமப்பட்டாலும் நடு வயதில் வறுமை நீங்கியவராகவும், வாழ்வின் இறுதியில் எல்லாம்பெற்ற திருப்தியுடையவராகவும் இருப்பீர்கள். இயற்கையில் ஆன்மபலம் குறைந்தவரான நீங்கள், எந்தவொரு விஷயத்திலும் வலியச்சென்று தலையிட்டுக்கொள்ள மாட்டீர்கள். உங்களில் பலருக்கு முன்னோர்கள் தேடிவைத்த சொத்துகளை அடைய முடியாது. தந்தையின் ஆதரவும் இருக்காது. பெருந்தன்மையும் மன்னிக்கும் இயல்பும் இயற்கையாக அமைந்திருக்கும். மற்றவர்கள் உங்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்தாலும் அதைக் கண்டுபிடித்து அவர்களிடமே அதுபற்றிக் கேட்டும் விடுவீர்கள். மற்றவர்களுக்கு புலனாகாத அற்புத விஷயங்களும், கண்ணுக்கும் கருத்துக்கும் எட்டாத நுண்ணிய விஷயங்களும் உங்களுக்கு எளிதில் தெளிவாகும்.
உங்களுக்கு தெய்வ பக்தியாலேயே எல்லாம் கிடைக்கும். பக்தியில் உள்ள பரவசத்தாலும், உண்மைப்பக்தியாலும் அருங்கலைகள் அனைத்தும் உங்களுக்கு கைவரப் பெறுவதுடன் பிறரை வயப்படுத்தும் சக்தியையும் அடைவீர்கள். தொழில்துறையில் கூட அதிக லாபம் இல்லாவிட்டாலும் வம்பு வழக்கு இல்லாத தொழிலையே செய்ய விரும்புவீர்கள். நஷ்டம் வருமென்று தெரியும் தொழிலிலோ அதிக லாபம் கிடைக்குமென்று தோராயமாக தெரியும் தொழிலிலோ தலையிட்டுக்கொண்டு தவிக்க மாட்டீர்கள்.
உங்களுக்குப் பின்னால் உங்களைப் பற்றி குற்றம் பேசுபவர்களும் உங்களை நேரில்கண்டால் பயந்து பணிந்து மரியாதை செலுத்துவார்கள். தராசு உங்கள் ராசி நாதனின் சின்னம் என்பதால் அறிவு நுட்பம் மிக்கவர்களாக இருப்பீர்கள். ஒழுக்கமாக, சட்டத்திற்கு உட்பட்டு வாழ்வதே உங்கள் குணமாக இருக்கும். சமநீதி, சமதர்மம், நியாயம், பாரபட்சமற்ற முறையில் செயல்படுவதையே பெரிதும் விரும்புவீர்கள்.
இவையெல்லாம் துலாம் ராசியில் பிறந்த உங்களின் பொதுப் பலன்களாகும். நீங்கள், துலாம் ராசியில் பிறந்திருந்தாலும் உங்கள் ஒவ்வொருவருக்கும் நட்சத்திரங்கள் வேறுபட்டிருக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரனின் நிலை வேறுபட்டிருக்கும். உங்கள் ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் கிரகங்கள் மாறுபட்டிருக்கும். லக்னங்களில் மாற்றம் இருக்கும். தசா புத்திகளில் வித்தியாசங்கள் இருக்கும். ஒருவருக்கு அமைந்திருப்பதுபோல் மற்றவர்களுக்கு கிரகங்கள் அமைந்திருக்காது என்பதால், ஜனன ஜாதகத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் பலன்கள் மாறுபடும்.
இந்த நிலையில்தான் கோட்சார ரீதியாக கிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து நமக்கு உண்டாகப் போகும் பலன்களை அறிந்து கொள்கிறோம். ஜாதகரீதியாக பாதகமான நிலை உள்ளவர்களுக்கும் கோட்சார பலன்களின் வழியே நன்மைகள் உண்டாகும் வாய்ப்புள்ளது. அந்த ரீதியில் சுப கிரகமான குரு பகவானின் பெயர்ச்சியை நாம் அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளோம்.
அதிர்ஷ்டங்களைத் தடுக்குமா அஷ்டம குரு
கடந்த ஒரு வருடமாக உங்கள் ராசியான துலாம் ராசிக்கு சப்தம ஸ்தானம் என்னும் ஏழாம் வீடான மேஷத்தில் சஞ்சரித்துவந்த குருபகவான், 1.5.2024 அன்று உங்கள் ராசிக்கு எட்டாம் இடமான ரிஷப ராசியில் சஞ்சரித்து உங்களுக்குப் பலன்களை வழங்கிட உள்ளார்.
குரு பகவான் ஏழாம் வீட்டில் சஞ்சரித்த காலத்தில் உங்கள் உடல்நிலையில் முன்னேற்றத்தையும், மனதில் உற்சாகத்தையும் உண்டாக்கியதுடன் புதிய திட்டங்கள் தீட்டி அதை செயல்படுத்துவதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டு அவற்றில் வெற்றிகளையும் கண்டு வந்திருப்பீர்கள். நண்பர்கள் உறவினர்கள் என்று எல்லோருடைய ஒத்துழைப்பும் வெற்றிப் பாதையில் உங்களை நடைபோட வைத்திருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு உண்டாகி இருக்கும். தொழில் தொடங்க நினைத்தவர்களுக்கு அதற்கான உதவியும் ஆதரவும் கிடைத்து செயலில் இறங்கி இருப்பீர்கள். உங்களின் சிறிய முயற்சியும் பெரிய அளவில் வெற்றியடைந்திருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்பு பெற்றிருப்பீர்கள். ஆசிரியர்கள் சந்தோஷமான மனநிலையுடன் இருந்திருப்பீர்கள். ஆடை ஆபரணச்சேர்க்கை, கூட்டு முயற்சிகளில் வெற்றி, எதிர்பாலினரால் நன்மை, நட்பால் மகிழ்ச்சி என்ற நிலை இருந்திருக்கும். வெளிவட்டார பழக்கங்களிலும் ஆதாயமும் நன்மைகளும் கண்டிருப்பீர்கள்.
உங்கள் பகுதியில் உங்கள் புகழ் ஓங்கியிருக்கும். பணிபுரியும் இடங்களில் உங்கள் சிறப்பு தெரிந்து உங்களைத் தலைமேல் தூக்கிவைத்து கொண்டாடி இருப்பார்கள். புதிய வாகனம் வாங்குதல், ஆடம்பர பொருட்கள் வாங்குதல், உல்லாசப் பயணம் செல்லுதல் என்று எல்லாமும் நன்மைகளாகவே நடந்திருக்கும். உறவினர்களின் வருகையும் ஆதரவும் அதிகரித்திருக்கும். ஒரு சிலருக்கு மனதிற்கேற்ற நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகியிருக்கும். சிலருக்கு திருமணம் கூடியிருக்கும். துணையைப் பிரிந்து வாழ்ந்தவர்களுக்கு புதிய துணை உண்டாகியிருக்கும்.
இவையெல்லாம் ஏழில் இருந்த குரு பகவானால் நீங்கள் அடைந்த நன்மைகளில் ஒரு சிலவாக இருக்கும். இந்த நிலையில் எட்டாம் வீட்டிற்குச்சென்று, அங்கே சஞ்சரிக்க உள்ள குரு பகவான் உங்களுக்கு எத்தகைய பலன்களை வழங்குவார்? கடந்த ஆண்டின் நன்மைகள் இப்பொழுதும் தொடருமா? அல்லது சோதனைகள் தோன்றுமா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
பொதுவாக, கோட்சார ரீதியாக கிரகங்கள் சுழற்சி பெற்று சஞ்சரிப்பதென்பது, எல்லோரும் ஒரே மாதிரியான நன்மைகளையோ சங்கடங்களையோ தொடர்ந்து அனுபவித்திடக்கூடாது என்பதற்காகத்தான்! நன்மைகள் அடைந்து வந்தவர்களுக்கு சங்கடங்களும், சங்கடங்களை சந்தித்து வந்தவர்களுக்கு நன்மைகளையும் வழங்குவதற்காகவே ஒரு ராசியிலிருந்து மறு ராசிக்கு கிரகங்கள் செல்கின்றன என்றும் சொல்லலாம். அல்லது இத்தகைய சுழற்சிகளால்தான் நம் வாழ்க்கையில் யாவும் நடைபெற்று நம் வாழ்க்கையை நாம் புரிந்துகொள்ள வழிகாட்டுகிறது என்றும் சொல்லலாம்.
சரி; உங்களுக்கு எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்திற்கு வரும் குரு பகவான் இனி உங்களுக்கு எத்தகைய பலன்களை வழங்குவார்? இதற்கு ஒரு பழம் பாடல்... 'இன்மையட்டினில் வாலி பட்டமிழந்து போம்படி யானதும்...' என்று நமக்கு கூறுகிறது.
குருபகவான் ஒரு ராசியினருக்கு எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில், அரசாளும் மன்னவனாக இருந்தாலும் பதவியை இழந்து நிற்பானம். அவனுடைய செல்வாக்கு, சொல்வாக்கு எல்லாம் மறைந்து போகுமாம்.
ஜாதகத்தில் எட்டாம் இடம் என்பது ஆயுள் ஸ்தானம், அஷ்டம ஸ்தானம் என்று கூறலாம். இந்த இடத்தை வைத்தே தொழில் நிலை, அதில் அடையப்போகும் ஏற்ற இறக்கம், தீராத வேதனை, மான அவமானங்கள், நோய், பகை, செலவினங்கள், கடன் தொல்லை, வம்பு வழக்குகள், சண்டை சச்சரவுகள், விபத்துகள், கணவன் மனைவியிடையே சச்சரவு ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.
கெடுதலான இடமாக கூறப்படும் இந்த இடத்தில் பாப கிரகங்கள் அமரும்போது கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற வார்த்தைக்கேற்ப கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் நடக்கும். ஆனால், குரு பகவான் முழுமையான சுபர் என்பதால் இந்த இடத்திற்குரிய பலன்களை நற்பலன் களாக அவரால் வழங்க முடியாமல் போவதுடன் எதிர்மறையான பலன்களையே வழங்குவார்.
எட்டாம் வீட்டில் அமர்ந்து அந்த வீட்டிற்குரிய பலன்களை பாதகமாக வழங்கப்போகும் குரு பகவான், அங்கிருந்து தன்னுடைய 5, 7, 9 ம் பார்வைகளால் பார்த்திட உள்ள, உங்கள் ராசிக்கு 12 மற்றும் 2, 4 ம் வீடுகளுக்குரிய பலன்களை நற்பலன்களாக வழங்கிட உள்ளார். என்பதால், குரு பார்க்க கோடி புண்ணியம் என்ற வார்த்தைகளுக்கேற்ப அந்த இடமெல்லாம் இக்காலத்தில் சிறப்படையப்போகிறது.
முதலில், தனது ஐந்தாம் பார்வையினால் உங்கள் ராசிக்கு 12 ம் இடமான விரய ஸ்தானத்தைப் பார்க்கும் குருபகவான், உங்கள் வீட்டில் சுப விரயத்தை உண்டாக்குவார். புதியதாக இடம் வாங்குதல், வீடு வாங்குதல், இருக்கும் வீட்டை புதுப்பித்து உங்கள் ரசனைக்கேற்ற விதத்தில் மாற்றுதல், பிள்ளைகளை உயர்கல்வியில் சேர்த்தல், மஞ்சள் நீராட்டு விழா, திருமணம் என்று செலவுகளை சுபச்செலவாக நடத்தி மகிழக்கூடிய நிலையை உண்டாக்குவார். உங்கள் வீட்டில் மகிழ்ச்சியும், கணவன் மனைவியிடையே அன்பும் பாசமும் அதிகரித்து சந்தோஷமான நிலையை அடைவீர்கள்.
அடுத்து, தனது ஏழாம் பார்வையினால் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான, தன குடும்ப வாக்கு ஸ்தானத்தின் மீது தனது பார்வையை செலுத்தும் குரு பகவான், உங்கள் குடும்பத்திற்கு தேவையான பணத் தேவையை எப்படியாவது சரி செய்வார். அவசரத் தேவைக்கு உங்களிடம் பணம் இல்லை என்றாலும் கேட்ட இடத்தில் பணம் கிடைத்து தேவையை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உங்கள் வார்த்தைக்கு வெளி வட்டாரத்தில் மதிப்பிருக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றிக் காட்டுவீர்கள். பயணத்தின் வழியே நன்மைகளை அடைவீர்கள். பட்டம், பதவி என்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். முகம், பற்கள், கண்கள் போன்றவற்றில் இருந்த பாதிப்புகள் அகல அதற்குரிய சிகிச்சை மேற்கொண்டு சரிசெய்து கொள்வீர்கள்.
அடுத்து, தனது ஒன்பதாம் பார்வையை உங்கள் ராசிக்கு நான்காம் இடமாகிய மாத்ரு, சுகம், வாகனம், கல்வி ஸ்தானத்தின் மீது செலுத்தும் குரு பகவான், தாய் வழியில் இருந்த சங்கடங்களை அகற்றுவார். தாயாரின் உடல்நிலையில் இருந்த பாதிப்புகள் அகலும். கல்வியில் உண்டான தடைகளை அகற்றி முன்னேற்றத்தை உண்டாக்குவார். ஆசிரியர்கள் நிலை உயர்வதுடன் புதிய பட்டம், விருது பெறுவது போன்ற வாய்ப்புகளை உருவாக்குவார். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நிலம், வீடு என்று ஒரு சிலருக்கு சொத்து சேரும். இதய நோய், நெஞ்சு வலி என்று அவதிப்பட்டு வந்த ஒரு சிலருக்கு அதிலிருந்து விடுதலை உண்டாகும். ஒரு சிலர் ஆலயங்களுக்குச் சென்று இறைவழிபாட்டை மேற்கொள்வீர்கள். உழைப்பும் சில சங்கடங்களும் அதிகரித்தாலும் உங்கள் மனம் அவற்றையெல்லாம் ஒரு பொருட்டாகவே எண்ணாது.
இவை யாவும் குருபகவானின் பார்வைகள் பலத்தால் நீங்கள் காணப்போகும் நற்பலன்களாகும். இன்னும் உங்கள் ஜாதகத்தில் தசா புத்தி வலுத்திருந்தால் எட்டாம் வீட்டு குருவின் பாதிப்புகள் உங்களை ஒன்றும் செய்யாது என்றே சொல்லலாம்.
பலன்களை மாற்றும் அஸ்தமன காலம்
குரு பகவான் 1.5.2024 அன்று அஷ்டமஸ்தானத்திற்கு செல்லும் நிலையில் 3.5.2024 முதல் 2.6.2024 வரை அவர் அஸ்தங்கம் அடைகிறார் என்பதால் இக்காலத்தில் அஷ்டம குருவின் பலன்களை அவரால் வழங்க முடியாமல் போகும். இதுவரை உண்டாகி வந்த பலன்களில் சிறு சிறு மாற்றங்கள் இருக்குமே ஒழிய பாதிப்புகள் உங்களை நெருங்காது. இக்காலத்தில் உங்கள் சுய ஜாதகத்தில் யோகமான திசாபுத்தி நடந்துவந்தால் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். செயல்கள் லாபமாகும்.
வக்ர காலம் உங்களுக்கு வசந்த காலம்
குரு பகவானின் சஞ்சார நிலையில், அஸ்தமனமும் வக்ர நிலையும் ஏற்படுவதால் அக்காலங்களில் அவர் வழங்கும் பலன்களில் மாற்றம் உண்டாகும். 15.10.2024 முதல் 11.2.2025 வரை குரு வக்ரமடைவதால் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து அவர் வழங்கி வரும் பாதக பலன்கள் இக்காலத்தில் மாறுபடும். பொதுவாக, குரு பகவான் வக்ரமடையும் போது முன்பிருந்த ராசியின் பலன்களை வழங்கிடக் கூடியவர் என்பதால், இக்காலத்தில் கடந்த காலத்தில் உங்களுக்குண்டான யோகமான பலன்கள் மீண்டும் தொடரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு உயரும். வருமானம் பல வழியிலும் வர ஆரம்பிக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். சொத்து சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.
ஐந்தாமிட சனியால் உண்டாகும் பலன்கள்
ஐந்தாம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் போது ஐஸ்வரியங்களும் இருந்த இடம் தெரியாமல் போகும் என்பர். குடும்பத்தில் சிற்சில சங்கடங்கள், பூர்வீக சொத்து விவகாரத்தில் பிரச்சினைகள், இழுபறி. பிள்ளைகள் வழியில் சங்கடங்கள், கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு, தொழிலில் நெருக்கடி, தடைகள், மேலதிகாரிகளின் விரோதம், நண்பர்கள் உறவினர்களிடம் கருத்து வேறுபாடு, மேற்கல்வியில் தடைகள், எல்லாவற்றிலும் இடையூறுகள், பண வரவிலும் நெருக்கடி. அவற்றையெல்லாம் சந்தித்து சங்கடத்திற்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும் என்பது பொது விதி என்றாலும் சுய ஜாதகத்தில் யோகமான திசாபுத்தி நடந்துவந்தால் இப்பலன்களில் மாற்றம் உண்டாகும்.
ராகு - கேது சஞ்சாரப் பலன்கள்
குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலம் முழுவதும், கேது உங்கள் ராசிக்கு 12 ம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் மனதை ஞான மார்க்கத்தில் கொண்டு செல்வார். உலகையும் உற்றார் உறவினர்களையும், நண்பர்களையும் நீங்கள் புரிந்து கொண்டு, யார் நல்லவர்? யார் கெட்டவர்? என்பதை தெரிந்து கொள்ளும் வாய்ப்பை உருவாக்குவார். வருமானம் என்பது மட்டுமே இக்காலத்தில் உங்கள் நோக்கமாக இருக்கும். அதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சமுதாயத்தில் எல்லோராலும் மதிக்கப்படும் நிலைக்கு உங்களை உயர்த்திக் கொள்ள முயற்சிப்பீர்கள். என்றாலும் நீங்கள் சம்பாதிக்கும் பணம் பல வழிகளில் கரையவும் வாய்ப்பிருப்பதால் கவனம் தேவை. இக்காலத்தில் ராகு ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு யோகத்திற்கு மேல் யோகம் ஏற்படும். முதலில் உங்கள் உடலில் இருந்த பாதிப்புகள் விலகும். உற்சாகமாக நடைபோடுவீர்கள். எதிரிகளாலும் விரோதிகளாலும் வந்த சங்கடங்கள் நீங்கும். நீங்கள் செய்துவரும் தொழில் எதுவாக இருந்தாலும் அது விருத்தியாகும். தொழிலிலும் வேலையிலும் நீங்கள் விரும்பிய மாற்றம் உண்டாகும். கடன் தொல்லையால் அவதிப்பட்ட நிலை மாறி அவற்றை அடைக்கும் வழி உண்டாகும். வருமானத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் வெற்றியாகும்.
சூரியனால் உண்டாகும் ராஜயோகம்
ஒவ்வொரு கிரகமும் தாம் சஞ்சரிக்கும் இடத்திற்கேற்ப பலன்களை சாதகமாகவும் பாதகமாகவும் வழங்கும் நிலையில், சூரிய பகவானும் அவரவர் ராசிக்கு 3, 6, 10, 11 ம் இடங்களில் சஞ்சரிக்கும்போது அந்த ஜாதகருக்கு சாதகமான பலன்களை வழங்குவார். மற்ற கிரகங்களால் ஏற்படக்கூடிய சங்கடங்களையும் கட்டுப்படுத்துவார். அக்காலங்களில் எல்லா வகையிலும் நன்மைகளை வழங்குவார். அந்த வகையில் துலாம் ராசியினரான உங்களுக்கு, ஆடி, ஆவணி, மார்கழி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களிலும் சங்கடங்களிலிருந்து உங்களை மீட்டெடுப்பார். நீங்கள் எதிர்பார்த்த நன்மைகளை உங்களுக்கு வழங்குவார். உங்கள் முயற்சிகளை எல்லாம் வெற்றியாக்குவார். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்களை இல்லாமல் செய்வார். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்துவார். உங்கள் மனதில் இருந்த குழப்பங்களை நீக்குவார். குடும்பத்தில் சந்தோஷமான நிலையை உண்டாக்குவார். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை சரிபடுத்துவார். புதிய தொழில் தொடங்கும் முயற்சியை நிறைவேற்றி வைப்பார். பணம் பல வழிகளிலும் வருகின்ற அளவிற்கு நிலை உருவாகும். உங்கள் செல்வாக்கு உயரும்.
பொதுப்பலன்
உங்கள் ராசிக்கு மறைவு ஸ்தானங்களுக்குரிய குரு பகவான், எட்டாம் இடமான மறைவு ஸ்தானத்திற்கு செல்வதால் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்படாமல் போகும். யோகமான நிலை ஏற்படும். வழக்கமான செயல்கள் யாவும் வெற்றியாகும் இழுபறியாக இருந்த முயற்சிகள் இக்காலத்தில் நிறைவேறும். ஆரோக்கியத்தில் இருந்த சங்கடங்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நீண்டகாலமாக இடம், வீடு வாங்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கு இப்போது அதற்குரிய வாய்ப்புண்டாகும். அசையா சொத்துகள் வந்துசேரும். பெண்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். வியாபாரிகளுடைய சங்கடங்கள் விலகும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். விவசாயிகளின் எல்லை விரியும். வருமானம் அதிகரிக்கும். ஆரம்பக் கல்வி, உயர்கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
பரிகாரம்
சென்னை, பாடியில் குடிகொண்டுள்ள ஜகதாம்பிகை சமேத திருவலிதாய நாதரையும், அங்கு எழுந்தருளி வரம்தரும், குரு பகவானையும் அர்ச்சனைங செய்து வழிபட வாழ்க்கை வளமாகும்.
திருக்கோவிலூர் பரணிதரன்
துல்லியமான கணிப்புகளுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு எண்ணில் எங்கள் புகழ்பெற்ற ஜோதிடரைத் தொடர்பு கொள்ளவும்.
For Appointment
9361761408 / 9940105752
Walkin to our Office:
Address: 44, 1st Floor, Chakrapani St, above Kotak Mahindra Bank ATM,
near five lights, Rangarajapuram, West Mambalam, Chennai, Tamil Nadu 600033
Google Map: Sun Astro TV office
Comments
Post a Comment