மேஷம்
அசுவினி, பரணி, கார்த்திகை 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கும், ராசி எதுவென்று தெரியாத, சித்திரை மாதத்தில் பிறந்தவர்களுக்கும், சு, செ, சே, சோ, சை, ல, லி, லு, லோ, அ, ஆ... ஆகிய எழுத்துகளில் ஏதேனும் ஒன்றை தங்கள் பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்களுக்கும் இப்பலன்கள் பொருந்தும்.
ராசியின் அதிபதி செவ்வாய். நட்சத்திர அதிபதிகள் கேது, சுக்கிரன், சூரியன். பாதகாதிபதி சனி. மாரகாதிபதி சுக்கிரன்.
****************
மேதினி போற்றும் மேஷம்
தைரிய, பராக்கிரம, வீரிய காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்து, துணிச்சலும், தைரியமும், எந்த ஒன்றையும் செய்து முடிக்கும் ஆற்றலும் கொண்ட மேஷ ராசி நண்பர்களே!
உங்கள் ராசிநாதன் நெருப்புக்காரகன் என்பதால் எந்த ஒரு செயலிலும் நீங்கள் வேகமாக இறங்குவீர்கள். எந்த ஒன்றையும் தள்ளி வைப்பதென்பது உங்களுக்குப் பிடிக்காத ஒன்றாகும். நினைத்தவுடன் செயல்பட்டு வெற்றியை அடைந்துவிட வேண்டும் என்ற வேகம் உங்களிடம் எப்போதும் இருக்கும். அடுத்தவரின் தயவை எதிர்பார்த்து எப்போதும் எதற்காகவும் காத்திருக்க மாட்டீர்கள். ஒன்மேன் ஆர்மிபோல் எல்லா செயல்களிலும் நீங்களே நேரடியாக ஈடுபடுவீர்கள்.
எல்லோருக்கும் ஆதரவாக இருக்க வேண்டும் என்பது உங்கள் எண்ணமாக இருக்கும். அதே நேரத்தில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைத் துணிச்சலாக எதிர்க்கவும் செய்வீர்கள். முன் கோபமுடைய உங்களுக்கு போராட்ட குணம் எப்போதுமே இருக்கும். வெளித்தோற்றத்திற்கு கரடு முரடானவர்போல் நீங்கள் தோன்றினாலும் உங்களை ஒருவர் நம்பிவிட்டால் அவருக்காக எந்த அளவிற்கு வேண்டுமென்றாலும் நீங்கள் செல்வீர்கள். அவருக்கு உதவி செய்து முன்னேற்றுவதே உங்கள் நோக்கமாக இருக்கும்.
நெருப்பின் தன்மை எப்போதும் மேல்நோக்கியே இருக்கும் என்பதால் எந்த இடத்திலும் உங்களை நீங்கள் மேலிருக்கும் படியே பார்த்துக்கொள்வீர்கள். உங்கள் செயலுக்கு யார் தடையாக இருந்தாலும் அவர்களை எப்படி வீழ்த்துவது என்பதை நீங்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருப்பீர்கள். எதிரிகளை அழிப்பதில் பேராற்றல் பெற்றவர்கள் நீங்கள் மட்டுமாகவே இருப்பீர்கள்.
எல்லையில் உள்ள ராணுவ வீரர்கள் தொடங்கி, உள்ளூரில் இருக்கும் காவல்துறையினர் வரையில் பெரும்பகுதியினர் உங்கள் ராசியினராகவே இருப்பார்கள். மற்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிடக் கூடியவர்களாகவும், ஆற்றல் மிக்கவர்களாகவும் எப்போதும் நீங்கள் விளங்குவீர்கள்.
மனித உடலில் தலைக்கும் முகத்திற்கும் உங்கள் ராசிநாதனான மேஷமே காரகமாகிறது என்பதால், சுய அறிவும், சொந்த மூளையும், முகத்தை கவர்ச்சியாக வைத்துக் கொள்ளும் திறமையும் கொண்டவர்களாக நீங்கள் இருப்பீர்கள். புதுப்புது சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு அதன் வழியில் செயல்படக்கூடிய புரட்சியாளர்களாகவும் இருப்பீர்கள். எவராலும் அடக்கிட முடியாத சக்தி கொண்டவர்களாகவும் நீங்கள் வாழ்வீர்கள்.
உங்கள் மேல் அதிகாரிகள் செய்யும் தவறுகளையும் தைரியமாக சுட்டிக் காட்டி விமர்சனம் செய்வீர்கள். இதனால் உங்களுக்கு எதிர்வினைகள் உண்டானாலும் அதை எப்படி சரி செய்வது என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருப்பீர்கள்.
உங்கள் ராசியில் பிறந்த ஒவ்வொருவரும் லட்சியவாதிகளாக இருப்பீர்கள் என்பதால் உங்களுக்கும் ஒரு லட்சியம் இருக்கும். அதை அடைவதற்குரிய வழிகளையும், வாய்ப்புகளையும் நீங்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருப்பீர்கள் என்பதால் உங்கள் பயணம் அதை நோக்கியே செல்லும்.
அதே நேரத்தில் ஒரு செயலில், நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் உங்களுக்கு வெற்றி கிடைக்காது என்ற முடிவிற்கு நீங்கள் வந்துவிட்டால் அதை அப்படியே விட்டுவிட்டு வேறு முயற்சியில் ஈடுபட ஆரம்பித்து விடுவீர்கள். சிலவற்றில் உங்களுக்கு வெற்றி கிடைக்காமல் போவதற்கு காரணம்கூட உங்களிடம் உள்ள அவசரத்தனமேயாகும்.
எந்த ஒரு செயலையும் யோசித்து திட்டமிட்டு நிதானமாக செய்தால் அதில் உங்களுக்கு உறுதியாக வெற்றி உண்டாகும். அரசியலில் முன் நிற்பவர்களில் ஒரு பகுதியினர் உங்கள் ராசியில் பிறந்தவர்களாகவே இருப்பார்கள். மற்றவர்களுக்கு தலைமை தாங்கி வழிநடத்திச் செல்வதிலும் உங்கள் ராசியினரே முதலிடத்தில் இருக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம், இயல்பாகவே உங்களிடம் அமைந்துள்ள ஆற்றலும் வேகமும்தான். எந்தச் செயலை எப்படி செய்ய வேண்டும் என்ற தெளிவும், யாரை எப்படி வீழ்த்துவது என்பதைத் தெரிந்து நீங்கள் வகுத்திடும் வியூகமும்தான்.
நாளை என்ன நடக்கும் என்றோ? எந்த ஒரு செயலுக்கும் எந்தவிதமான பின் விளைவுகள் உண்டாகும் என்பது பற்றியோ யோசித்துக்கொண்டு, அதற்காக பயந்து கொண்டிருக்க மாட்டீர்கள்.
உங்களை நோக்கிவரும் ஒவ்வொன்றின் மீதும் தடாலடியான நடவடிக்கைகளில் இறங்குவீர்கள். சில நேரங்களில் யார் என்னவென்று யோசிக்காமலேயே உங்கள் வேகத்தை வெளிப்படுத்த ஆரம்பித்து விடுவீர்கள். இத்தகைய உங்கள் செயல்களால் நண்பர்கள் எண்ணிக்கையும் உங்களுக்கு சொல்லிக் கொள்வது போல் இருக்காது.
வாழ்க்கையின் மீது அதிகபட்ச கனவுகளும் ஆசைகளும் உள்ள உங்களுக்கு, கற்பனை சக்தி என்பது மிக அதிகமாக இருக்கும். நீங்கள் கற்பனையில் காண்பதுபோல் வாழ்க்கையும் அமைய வேண்டும், அதேபோல் வாழ வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு அளவில்லாமல் இருக்கும். ஆனால், அத்தகைய நிலை உங்களில் பலருக்கு அமையாமலே போய்விடுகிறது. அதற்கும் காரணம் உங்கள் பொறுமையற்ற தன்மைதான்.
உங்கள் கனவுகள் சில நிறைவேறாமல் போனாலும், உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைகளை அடைந்திடக் கூடியவராக நீங்கள் இருப்பீர்கள். வீடு, மனை, நிலம், வாகனம் என்று எல்லாமும் உங்களுக்கிருக்கும். குடும்பம் குழந்தைகள் என்று உங்களுக்கு உண்டானாலும் குழந்தைகளுக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகி தனிமைப்படுத்தப்படும் நிலைக்கும் சிலர் ஆளாவீர்கள்.
எல்லாவற்றையும் கிரகித்திடக்கூடிய ஆற்றல் பெற்ற உங்களுக்கு உங்கள் தகுதியின் மூலம் கிடைக்கும் வாய்ப்பு, வருமானத்தை விட, உங்கள் திறமையின் மூலம் உண்டாகும் வருமானமும், வாய்ப்புமே அதிகமாக இருக்கும். ஒரு துறையில் தகுதி கொண்டு ஒருவர் சாதிக்கும் சாதனையைவிட அதுபற்றி தெரிந்து கொண்டு நீங்கள் சாதிப்பவை நூறு மடங்காக இருக்கும்.
இவையெல்லாம் மேஷ ராசியில் பிறந்த உங்களின் பொதுப் பலன்களாகும்.
மேஷ ராசியில் நீங்கள் பிறந்திருந்தாலும், ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் கிரகங்கள் மாறுபட்டிருக்கும், லக்னங்களில் மாற்றம் இருக்கும், தசா புத்திகளில் வித்தியாசம் இருக்கும், பொதுவாக ஒருவருக்கு அமைந்திருப்பது போல் மற்றவருக்கு கிரகங்கள் அமைந்திருக்காது என்பதால், ஜனன ஜாதகத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் பலன்கள் மாறுபடும்.
இந்த நிலையில் கோச்சார ரீதியாக கிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து நமக்கு உண்டாகப்போகும் பொதுப் பலன்களை அறிந்து கொள்கிறோம். ஜாதக ரீதியாக பாதகமான நிலையை அடைந்திருப்பவர்களுக்கும் கோட்சார பலன்கள் நன்மையை உண்டாக்கிடக் கூடியதாக உள்ளன. அந்த ரீதியில் குரு பகவானின் பெயற்சியை நாம் அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளோம்.
ஏற்றம் தரும் இரண்டாம் இட குரு
கடந்த ஒரு வருடமாக உங்கள் ஜென்ம ராசியான மேஷத்தில் ஜென்ம குருவாக சஞ்சரித்து வந்த குரு பகவான் 1.5.2024 அன்று உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான, தன குடும்ப வாக்கு ஸ்தானமான ரிஷப ராசியில் சஞ்சரித்து உங்களுக்குப் பலன்களை வழங்கிட உள்ளார்.
கடந்த வருடத்தில் நீங்கள் அனுபவித்த சோதனைகளும், வேதனைகளும் உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்களைச் சேர்ந்தவர்களுக்கும் நன்கு தெரியும். வேலையின் காரணமாக நீங்கள் ஓரிடம் உங்கள் குடும்பம் ஓரிடமாக இருந்திருப்பீர்கள். மனதில் நிம்மதியற்ற நிலை உண்டாகி வாழ்க்கையை வெறுக்கும் அளவிற்கு சென்றிருப்பீர்கள்.
ஜென்ம குரு பற்றி... ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும்' என்று ஒரு பழம் பாடலே உள்ளது.
ராமருடைய ஜாதகத்தில் அவருடைய ஜென்ம ராசிக்கு குரு வந்தபோதுதான் சீதையை இராவணன் சிறை எடுத்து வைத்திருந்தானாம். அதனால் மனைவி ஒரு திசையில் கணவன் ஒரு திசையில் இருக்க வேண்டிய நிலை உண்டானதாம்.
சரி, எல்லாமும் எங்களுக்குத் தெரியும். நாங்கள் பட்ட அவதி எங்களுக்கு தெரியாதா? இப்போது இரண்டாம் வீட்டிற்கு வரும் குரு பகவான் எந்த மாதிரியான பலன்களை வழங்குவார்? இதன் பிறகாவது எங்கள் வாழ்க்கையில் நன்மைகள் நடக்குமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
சோதனைகளை அனுபவித்த உங்களுக்குத்தானே அதன் வேதனைகள் புரியும். போன காலம் பொல்லாத காலம், வரும் காலம் வசந்த காலம் என்றுதான் சொல்ல வேண்டும். குரு பகவான் அவரவர் ராசிக்கு 2,5,7,9,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும்போது அந்த இடங்களுக்கு நற்பலன்களை வாரி வழங்குவார் என்பது பொதுவான விதி.
குரு பகவான் அமரும் இடம் சங்கடமாகும். அவர் பார்க்கும் இடங்கள் சுப பலன்களை அடையும் என்ற விதிக்கு 2,5,7,9,11 ஆம் இடங்கள் மட்டும் விதிவிலக்காகும். இந்த இடங்களில் குரு பகவான் சஞ்சரிக்கும்போது நற்பலன்களை வழங்குவதுடன், அவர் பார்க்கும் இடங்களுக்கும் நற்பலன்களை வழங்கி ஜாதகருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளை வாரி வழங்குவார்.
'அப்பா நல்ல காலம் வந்தது...' என்று நீங்கள் நிம்மதியடைவது தெரிகிறது. இந்த நேரத்தில் உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரகங்கள் பலமாக அமைந்திருந்தால், தசா புத்தி நன்றாக இருந்தால், இந்தப் பலனில் கூடுதலாகவே உங்களுக்கு நன்மைகள் உண்டாகும்.
ஜாதகத்தில் இரண்டாம் இடம் என்பது தனஸ்தானம், குடும்பஸ்தானம், வாக்குஸ்தானம், நேத்திர ஸ்தானம் ஆகும். இந்த இடத்தைக் கொண்டு, பணம், குடும்பம், வாக்கு, கண்கள், கல்வி, அதிர்ஷ்ட வாய்ப்புகள், பயணம், புதையல் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.
சுப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் குரு பகவான் வரும் காலம் அந்த ஜாதகருக்கு பொற்காலம் என்றே சொல்லலாம். இக்காலத்தில் நீங்கள் மண்ணைத்தொட்டாலும் பொன்னாகும் என்று சொல்ல வேண்டும். உடல்நிலையில் இருந்த பாதிப்புகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்த குழப்பங்கள் அகலும். விலகிச் சென்ற உறவுகளும், நட்புகளும் மீண்டும் உங்களை நோக்கி வருவார்கள். அவர்களால் பலவிதத்தில் உங்களுக்கு நன்மையும் உதவியும் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடந்தேறும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் கூடிவரும். மனதில் புத்துணர்ச்சியும், செயலில் வேகமும் இருக்கும். எதிலும் வெற்றி என்ற நிலையில் எதிர்பாராத பண வரவும் உண்டாகும். இப்படி நிறையவே பலன்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
குரு பகவான் இரண்டில் சஞ்சரிக்கும் காலத்தில் எல்லாமும் நற்பலன்களாகவே நடக்கும். இக்காலத்தை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் உங்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.
பார்வைகளால் உண்டாகும் பலன்கள்
இரண்டாம் இடத்தில் அமர்வதால் எண்ணற்ற நன்மைகளை வழங்கிடக் கூடிய குரு பகவான், அங்கிருந்து தன் 5, 7, 9 ம் பார்வையால் உங்கள் 6 ம் இடம், 8 ம் இடம், 10 ம் இடங்களைப் பார்க்கப் போகிறார் என்பதால் அந்த இடமெல்லாம் இக்காலத்தில் சிறப்படையப் போகிறது.
முதலில் தனது 5 ம் பார்வையை உங்கள் ராசிக்கு 6 ம் இடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தின் மீது செலுத்தும் குரு பகவான், உங்கள் உடலில் உள்ள நோய் நொடிகளை அகற்றுவார். குடும்பத்தில் உள்ளவர்களின் உடல் நிலையினையும் மேம்படுத்துவார். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாட்டை அகற்றுவார். விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகளை இல்லை என்று செய்திடுவார். புதிய நண்பர்களின் சேர்க்கையையும் அதனால் அனுகூலத்தையும் உண்டாக்குவார். கடன் தொல்லைகளை அகற்றுவார். வழக்குகளில் இருந்து உங்களை விடுவிப்பார்.
அடுத்து, தனது 7 ம் பார்வையை உங்கள் ராசிக்கு 8 ம் இடமான அஷ்டமம் மற்றும் ஆயுள் ஸ்தானத்தின் மீது செலுத்தும் குரு பகவான், முதலில் உங்கள் ஆயுளை பலமடையச் செய்வார். செய்து வரும் தொழிலில் இருந்த தேக்கத்தை அகற்றுவார். முயற்சிக்குமேல் முயற்சி மேற்கொண்டும் நடக்காமல் இருந்த வேலைகளை சுலபமாக நடத்தி வைப்பார். வேலைப் பார்க்கும் இடத்தில் மேலதிகாரிகளுடனும் சக ஊழியர்களுடனும் உருவான மோதலை ஒரு முடிவிற்கு கொண்டு வருவார். வரவேண்டிய தொகையை உங்கள் கைக்கு வரவைப்பார். குடும்பத்தில் சந்தோஷத்தை உண்டாக்குவார். எல்லோருடனும் சமூக போக்கை ஏற்படுத்துவார்.
அடுத்து, தனது 9 ம் பார்வையை உங்கள் ராசிக்கு 10 ம் இடமான ஜீவன ஸ்தானத்தின் மீது செலுத்தும் குரு பகவான் உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருப்பார். நீங்கள் செய்துவரும் தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். உத்தியோகத்தில் இருந்த குழப்பங்களை அகற்றுவார். தேவையில்லாத இடமாற்றத்தால் மனநிலை, உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையை மாற்றுவார். மேலதிகாரிகளும், முதலாளிகளும் உங்கள் வார்த்தைக்கு மதிப்பளிக்கும் நிலையை உண்டாக்குவார். இருக்கும் இடத்தில் செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பெற்றோரிடமும், சகோதரர்களுடனும் இருந்த கருத்து வேறுபாடுகள் அகன்று பாசத்தில் திளைப்பீர்கள். இதுவரை வீட்டில் இருந்ததை விற்றும் அடகு வைத்தும் வாழ்க்கையை ஓட்டி வந்த நிலை மாறும். புதிய நகைகள், நவீன பொருட்கள் வாங்கும் நிலை உண்டாகும். இருப்பிடத்தை உங்கள் வசதிக்கேற்ப அமைத்துக் கொண்டு நிம்மதியாக வாழ ஆரம்பிப்பீர்கள்.
இவை யாவும் குரு பகவான், தன் பார்வைகளால் உங்களுக்கு வழங்கிடப் போகும் நற்பலன்கள் ஆகும்.
பலன்களை மாற்றும் அஸ்தமன காலம்
குரு பகவானின் சஞ்சார நிலையும், அவரின் பார்வைகளும் உங்களுக்கு சாதகமாக உள்ள நிலையில், 3.5.2024 முதல் 2.6.2024 வரை அவர் அஸ்தங்கம் அடைவதால் இக்காலத்தில் மேலே கூறிய பலன்கள் உங்களுக்கு ஏற்படாமல் போகும். அவசர கதியிலும் சிந்திக்காமலும் செயல்பட்டு சில சங்கடங்களுக்கு ஆளாவீர்கள்.
வக்ர காலத்தில் மாறும் பலன்கள்
குரு பகவானின் சஞ்சார நிலையில், அஸ்தமனமும், வக்ர நிலையும் ஏற்படுவதால் அக்காலத்தில் அவர் வழங்கும் பலனிலும் மாற்றம் உண்டாகும். 15.10.2024 முதல் 11.2.2025 வரை குரு வக்ரம் அடைவதால் அவருடைய பலன்கள் இக்காலத்தில் மாறுபடும். குரு பகவான் வக்ரம் அடையும்போது முன்பிருந்த ராசியின் பலன்களை வழங்கிடக்கூடியவர் என்பதால் இக்காலத்தில் உங்களுக்கு அலைச்சலை அதிகரிப்பார். வேலை பளுவை உண்டாக்குவார் என்றாலும் குழந்தை பாக்கியத்தை அளிப்பார். திருமண வயதினரை மணமேடை ஏற வைப்பார். தெய்வ அருளை உண்டாக்குவார்.
லாப சனியால் யாவிலும் முன்னேற்றம்
ரிஷப ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலம் முழுவதும் சனி பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதால் தொழிலில் இருந்த தடைகள் விலகும். இயங்காமல் இருந்த தொழில்களும் இயங்க ஆரம்பிக்கும். ஒருசிலர் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். வியாபாரம் முன்னேற்றம் அடையும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பணம் பல வழிகளிலும் வரத் தொடங்கும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும்.
ஆறாமிட கேதுவால் அதிர்ஷ்டம் உண்டாகும்
குரு பகவான் ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் காலம் முழுவதும் ராகு, விரய ஸ்தானமான 12 ம் இடத்திலும், கேது, சத்ரு ஸ்தானமான 6 ம் இடத்திலும் சஞ்சரிப்பதால் ஒரு பக்கம் செலவு அதிகரித்தாலும் மறுபக்கம் உங்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். எதிரிகளால் உண்டான தொல்லைகள் விலகும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். இழுபறியாக இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். உங்கள் செல்வாக்கு உயரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
சூரியனால் உண்டாகும் யோகம்
ஒவ்வொரு கிரகமும் அவரவர் சஞ்சரிக்கும் நிலைக்கேற்ப பலன்களை வழங்குவது போல், சூரிய பகவானும் அவரவர் ராசிக்கு 3, 6, 10, 11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் போது யோகமான பலன்களை வழங்குவார். ஜாதகருக்கு அக்காலத்தில் எல்லாவிதத்திலும் நன்மைகள் உண்டாகும். நெருக்கடிகள் இல்லாமல் போகும். அந்த ரீதியில், மேஷ ராசியினரான உங்களுக்கு ஆனி, புரட்டாசி, தை, மாசி ஆகிய நான்கு மாதங்களிலும் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். உங்கள் செல்வாக்கு உயரும். பிரச்சினைகள் விலகும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு பதவி வந்து சேரும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். வருமானம் உயரும். புதிய சொத்து சேரும்.
பொதுப்பலன்
இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கும் குரு பகவானால் குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் எல்லாம் விலகும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் கூடி வரும். பொருளாதார நிலை உயரும். பல வழிகளிலும் பணம் வர ஆரம்பிக்கும். புதிய சொத்துக்கள் சேரும். கல்வி, வேலை போன்ற கனவுகள் நிறைவேறும். ஒரு சிலர் கல்வி, வேலைக்காக வெளிநாட்டிற்கும் செல்வீர்கள். இக்காலம் உங்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்ட காலமாக இருக்கும். உங்கள் விருப்பங்கள் யாவும் நிறைவேறும்.
பரிகாரம்
திருச்செந்தூர் சென்று செந்தில் ஆண்டவனை வணங்கி வழிபட்டுவர நெருக்கடிகளும் சங்கடங்களும் நீங்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். வாழ்வில் புதிய பாதை தெரியும்.
திருக்கோவிலூர் பரணிதரன்
துல்லியமான கணிப்புகளுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு எண்ணில் எங்கள் புகழ்பெற்ற ஜோதிடரைத் தொடர்பு கொள்ளவும்.
For Appointment
9361761408 / 9940105752
Walkin to our Office:
Address: 44, 1st Floor, Chakrapani St, above Kotak Mahindra Bank ATM,
near five lights, Rangarajapuram, West Mambalam, Chennai, Tamil Nadu 600033
Google Map: Sun Astro TV office
Comments
Post a Comment